கூட்டணிக்கு செல்லும் தவெக? விஜய் டெல்லி செல்லும் சூழலில் அவசர ஆலோசனை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் திகதி அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆளும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கொமக, மமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ள நிலையில், பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்பதால், அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது.
வழக்கம் போல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, 118 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 118 பெண் வேட்பாளர்கள் என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்துள்ளது.
கூட்டணியில் இணையும் தவெக?
இந்நிலையில், தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் பங்கு என் அறிவித்தும் எந்த கட்சியும் கூட்டணியில் இணையவில்லை.

இதனால் தவெக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் தவெக தலைவர் விஜய் நேர்காணல் நடத்தினார்.
தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்த நிலையில், தவெக தரப்பில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தததால் பாஜகவை கூட்டணியில் இணைத்தது.
பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்ததால் விஜய், இந்த கூட்டணியில் இணைய மாட்டார் என கூறப்பட்டு வந்தது.
இருப்பினும், பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் மூலமாக தவெகவை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்து வருகிறது.
அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இந்த சூழலில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது.
மொத்தமுள்ள 132 மாவட்டச் செயலாளர்களில் 120 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்த கேள்விக்கு 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லும் நிலையில், இந்த அவசர ஆலோசனை கூட்டம் விஜயின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி செல்லும் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான 3ஆம் கட்ட விசாரணைக்காக மார்ச் 10 ஆம் திகதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக கோரி சிபிஐ சம்மன் அனுப்பியது.

வேட்பாளர் தேர்வு நேர்காணல் காரணமாக 15 நாட்கள் கால அவகாசம் மற்றும் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், மார்ச் 15 ஆம் திகதி டெல்லியில் விஜய் ஆஜராக வேண்டும் என சிபிஐ புதிய சம்மன் அனுப்பிய நாளை மாலையே விஜய் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.