ஸ்டெர்லைட் ஆலையினை ஆக்சிஜன் உற்பத்திக்கு திறக்கலாம்: மத்திய அரசு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்கு நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு வாயு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி அப்பகுதி மக்களை கடுமையாக பாதித்தது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளது.
இதனை பயன்படுத்திக் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் இந்த மனு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்ததுள்ளது அத்துடன் உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக ஒரு மனுவை வேதாந்தா குழுமம் தாக்கல் செய்தது.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக்கு வந்தது.இதில் வேதாந்தா நிறுவனம் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜாரகினார்.
அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் 1000 டன் ஆக்சிஜனையும் இலவசமாக வழங்கவும் வேதாந்தா நிறுவனம் தயாராக உள்ளது என்றார்.
அப்போது, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி தரலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி பாப்டே, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஆக்சிஜன், மருந்து பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டியது கட்டாயமாகும் என்றார்.
மேலும், இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.