குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்! என் மகனுக்கு நடந்த அநீதி இனி யாருக்கும் நடக்ககூடாது - தாய் குமுறல்

Chennai
By Thahir Jul 04, 2023 01:34 PM GMT
Report

குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து முதற்கட்டமாக இன்று பெற்றோர்களிடம் விசாரணை நடைபெற்றது.

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் இவருக்கு வயது 32. இவருக்கு 1.5 கிலோ எடையில் குறைமாத பிரசவத்தில் ஆண் குழந்தை முகமது மகிரின் பிறந்துள்ளான்.

குழந்தை முகமது மகிரினுக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலக்ஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தைக்கு கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

அறுவை சிகிச்சை முடிந்த பின் குழந்தை வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும் போது வெளியே வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

நிறம் மாறிய குழந்தையின் வலது கை

பின்னர் குழந்தை முகமது மகிரினுக்கு இரண்டு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்பட்டப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தான்.

இதையடுத்து குழந்தைக்கு கடந்த 29 ஆம் தேதி வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது குழந்தையின் கை திடீரென சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்! என் மகனுக்கு நடந்த அநீதி இனி யாருக்கும் நடக்ககூடாது - தாய் குமுறல் | Remove The Child S Right Hand Issue

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா செவிலியர்களிடம் இது பற்றி தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் இது ஒரு பிரச்சனை இல்லை என தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதும் நிறம் மாற தொடங்கியது.

இதனால் பதறிப்போன தாய் அஜிஷா நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்ற போது குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கூறி எழுப்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை குழு அமைப்பு

பின்னர் குழந்தையின் வலது கையின் தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டது. செவிலியர்களின் கவனக்குறைவே குழந்தையின் கை அழுகியதற்கு காணரம் என குழந்தையின் தாய் அஜிஷா மற்றும் அவரது தந்தை தஸ்தகீர் குற்றம் சாட்டியுள்ளனர்.  

இந்நிலையில் குழந்தையை நேரில் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்திருப்பதாகவும், குழந்தையின் சிகிச்சையில் அலட்சியம், கவனக்குறை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். விசாரணை குழு இன்று முதற்கட்டமாக முதலில் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணையை மேற்கொண்டது.

விசாரணை முடித்து வந்த குழந்தையின் தாய் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது  அவர் பேசுகையில், 

"காலை 10 மணிக்கு எங்களை விசாரணை என்று அளித்தனர், விசாரணை நல்லபடியாக முடிந்தது. விசாரணையில் "எதனால் இந்த பிரச்சனை ஆரம்பித்தது? குழந்தைக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்து? என எழுத்துபூர்வமான கேள்வியாக கேட்டனர், நாங்களும் பதில் சொன்னோம்.

29ஆம் தேதி ஊசி போட்ட பின்னர்தான் பிரச்சனை, அன்றே நான் செவிலியர்களிடம் குழந்தையின் வலது கை விரலில் இருந்து மணிக்கட்டு வரை கருஞ்சிவப்பாக மாறி இருந்தது அதை நான் தொடர்ந்து வலியுறுத்திய பின்னர்தான் அதை எடுத்திதார்கள்.

என் குழந்தையின் கை பறிபோனதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே காரணம். நான் சொன்னபோதே எடுத்திருந்தால் என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இனி யாரும் இந்த தவறை மறந்து கூட செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய குழந்தையின் தாய் " அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பார்க்கலாம்? அனைவரையும் விசாரணை நடத்தி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளனர் . என் மகனுக்கு நடந்த அநீதி இனி யாருக்கும் நடக்ககூடாது, இதற்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதுவரை நான் போராட்டத்தை தொடர்வேன் என்று பேசினார் . அமைச்சர் பலமுறை குறைமாத குழந்தை என்று தெரிவித்தார். எந்த தாயிடமும் இந்த வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். 

அமைச்சர் வரும்போது மட்டும் தான் அனைவரும் உடன் இருந்தார்கள். அதன் பின் யாரும் இல்லை. நான் மட்டும்தான் இருந்தேன்.

பாதிக்கப்பட்ட எங்களை வைத்து பேசவில்லை. குழந்தையின் தலை 61 சென்டி மீட்டர் இருந்தது என்று அமைச்சர் சொன்னார். தலை சுற்றளவு 53 செண்டி மீட்டர் தான் உள்ளது. இன்று காலை தான் நான் அளந்து பார்த்தேன்.

26 ஆம் தேதி இரண்டு கையுடன் நல்ல நிலையில் தான் என் மகனை கொண்டு வந்தேன். இன்று என் மகனை ஒற்றைக் கையுடன் பார்க்கிறேன். இவ்வாறு குழந்தையின் தாயார் அஜிஷா பேசினார்.