விராட் கோலியை நீக்க நான்கு மாதங்கள் காத்திருந்த பிசிசிஐ - அதிர்ச்சி தகவல்
இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க நான்கு மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் தொடர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாகவே இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் பின்னால் உள்ள உண்மையான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
மேலும் விராட் கோலி,பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விளக்கமளிப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 தொடர் கேப்டனாக செயல்பட மாட்டேன் என்று கூறிய விராட் கோலி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் டி20. ஒருநாள் அணிக்கு ஒரே கேப்டன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என விரும்பிய பிசிசிஐ ரோகித் சர்மாவை கேப்டன் ஆக்கியது.
இந்நிலையில் விராட் கோலியை ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக நான்கு மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.