நோயாளியின் மூளையில் இருந்த கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை
கொரோனா நோயாளியின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து அளவுள்ள கருப்பு பூஞ்சையை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கருப்பு பூஞ்சை நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள ஜமுயியைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் சமீபத்தில் கொரோனா நோயிலிருந்து குணமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (ஐஜிஐஎம்எஸ்) மருத்துவர்கள் 60 வயதான அனில்குமாரின் மூளையில் இருந்து மியூகோமிகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சையை வெற்றிகரமாக அகற்றினர்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்கள் நல்லவேளையாக கருப்பு பூஞ்சை அவரின் கண்களுக்குள் செல்லவில்லை என தெரிவித்தனர்.