அமைச்சர் மிரட்டலால் பழனி முருகன் கோவிலில் அறிவிப்பு பலகை அகற்றம் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு

BJP P. K. Sekar Babu Dindigul
By Thahir Jun 25, 2023 07:11 AM GMT
Report

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நேற்று இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று வைக்கப்பட்ட பலகையை அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து அதிகாரிகள் எடுத்துள்ளனர் என்று ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய அறிவிப்பு பலகை 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலுக்கு செல்ல முயன்ற வேறு மதத்தைச் சேர்ந்த சிலரை அதிகாரிகள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பலகையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

ஹெச்.ராஜா கண்டனம் 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும்.

Removal of notice board – H. Raja condemned

இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே ’ இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை’ என்ற அறிவிப்பு பலகையை அறநிலையத்துறை வைத்தது.

பின்னர் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான்.

பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.