கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகள் - பொது மக்கள் ஆதங்கம்

Corona Madurai Remdesivir Black Market
By mohanelango May 12, 2021 06:39 AM GMT
Report

மதுரையில் ரெம்டெசிவர் மருந்து கள்ளசந்தையில் விற்கப்படுகிற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மருத்துவ கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ரெம்டெசிவர் விற்பனை மையத்தில் ரெம்டெசிவர் மருந்து பெட்டிகளை அங்குள்ள ஊழியர்கள் மூலமாக குப்பைதொட்டியில் போட்டுவிட்டு அதனை வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.  

ரெம்டெசிவர் மருந்து பெட்டி ஒன்று 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அவலத்தை மருந்து வாங்க காத்திருந்த நோயாளி ஒருவர் முறைகேடுகள் நடைபெறும் இடத்தில் சென்று வீடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரெம்டெசிவர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இந்த மருந்து விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


நேற்று முதல் மதுரை விற்பனையகத்தில் ரெம்டெசிவர் டோக்கன் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது முறைகேடு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 வயால்கள் கொண்ட ஒரு பெட்டி ரெம்டெசிவர் மருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஏற்கனவே மருந்துகளை பெறுவதற்கான டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது வெளியான வீடியோவால் முறைகேடு உறுதியாகியுள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்