மத சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது - பாஜக வழக்கறிஞரை எச்சரித்து அனுப்பிய உச்சநீதிமன்றம்
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில், “மதமாற்றத்தைத் தடுக்க ஒருகுழுவை மத்திய அரசு அமைக்க உத்தரவிட வேண்டும். மூடநம்பிக்கைகள், மாந்தரீக வேலைகள், மதமாற்றம் ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் தாக்கல் செய்யவும் உத்தர வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. "18 வயது நிரம்பிய ஒருவர் தான் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற உரிமை இருக்கிறது. அதில் நீங்களோ நீதிமன்றமோ தலையிட முடியாது" என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த மனுவால் கோபமடைந்த நீதிபதிகள் அமர்வு, பொழுதுபோக்குக்காக இதுபோன்ற பொதுநல மனுவை தாக்கல் செய்தால் வருங்காலத்தில் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என்று மனுதாரர் அஸ்வினி உபாத்யாயாவை எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து தன்னுடைய மனுவை அஸ்வினி திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிகாத் என்கிற பெயரில் திருமணத்திற்காக செய்யப்படும் மதமாற்றங்களை தண்டிக்க புதிய சட்டங்களை இயற்றியிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.