தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு

M K Stalin Sri Lanka
By Thahir May 22, 2022 04:57 PM GMT
Report

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள்,

ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடந்த 18ம் தேதி முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அரிசி, பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை துறைமுகத்தில் புறப்பட்ட இந்த கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அந்த பொருட்கள் இன்று இலங்கையை சென்றடைந்தன. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பீரிசிடம், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இந்த பொருட்களை ஒப்படைத்தார்.