“இந்தியே தேசிய மொழி” - சொமேட்டோவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய கேஃஎப்சி
இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான் என கூறிய கே.எஃப்.சி. ஊழியருக்கு கண்டனம் தெரிவித்து #RejectKFC என்ற ஹேஷ்டேக் கர்நாடகா மக்களால் ட்விட்டரில் ட்ரெண்ட செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக நாட்டின் தேசிய மொழி இந்தி என்ற கருத்தை மற்ற மொழியினர் மீது திணித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த வாடிக்கையாளரிடம் சொமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக #RejectZomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு சொமேட்டோ மன்னிப்பு கோரியது.
மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டு, புகாரளித்தவர் கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சொமேட்டோவை தொடர்ந்து, மொழி சர்ச்சையில் கேஎஃப்சி சிக்கியுள்ளது.
ಕರ್ನಾಟಕದಲ್ಲಿರುವ ಕೆಎಫ್ ಸಿ ಗಳಲ್ಲಿ ಕನ್ನಡ ಹಾಡು ಹಾಕುವಂತಿಲ್ಲ ಅಂತ @KFC_India ನಿಯಮ ಮಾಡಿದೆಯಂತೆ!#ಇದೆಂತಹಗಾಂಚಲಿ #BanKFCinKarnataka @CMofKarnataka @karkalasunil @rajanna_rupesh pic.twitter.com/a8SMvRXXmJ
— ವಿನಯ್ ?? (@meVinayRW) October 23, 2021
கர்நாடகாவில் உள்ள கே.எஃப்.சி. விற்பனை மையம் ஒன்றில் இந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இந்தி பாடல் ஒலிபரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு கர்நாடகாவில் உள்ள உணவு மையம் என்பதால் கன்னட பாடலை ஒலிபரப்புமாறும் இல்லையென்றால் பாடலை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
இதனை ஏற்க மறுத்த கே.எஃப்.சி நிறுவன ஊழியர் இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என்று அந்த பெண்ணுக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து கே.எஃப்.சி. நிறுவன ஊழியரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.