போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொலை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Attempted Murder
By Petchi Avudaiappan May 04, 2022 09:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் அடித்து கொலை சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜி நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனது கணவரின் முகத்தில் அடித்த காயம் இருப்பதாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ராஜியின் மனைவி கலா அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

அதனடிப்படையில் போலீசார் போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் ராஜியை மாப் கட்டையால் தாக்கி சுடு தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதால் இறந்ததாக தெரிய வந்தது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மறுவாழ்வு மைய ஊழியர்களான யுவராஜ், கேசவன், செல்வமணி, சரவணன், சதீஷ், மோகன், பார்த்தசாரதி ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வராமல் வீடியோ கால் மூலம் பேசி ராஜியின் உடல் முழுவதும் அடிக்க சொல்லி கொலை செய்ய கூறியதாக கைதான 7 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரின் குடும்பத்தினரிடம் இந்த மையத்தில் அடித்து கொடுமைப்படுத்துவதாக ராஜி தெரிவித்ததால் வேறு மையத்திற்கு அந்த நபரை சேர்த்ததால் உரிமையாளர் கார்த்திகேயன் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொலை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Rehabilitation Centre Confessed About The Murder

இது தொடர்பாக ராஜின் மகன் மணிகண்டனை அழைத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ராஜி சிகிச்சை பெற வந்த போது வீடியோ காலில் ஊழியர்களிடம் பேசி உடல் முழுவதும் தாக்கி ராஜியை கொலை செய்ய சொன்னதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும்  கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும், முன்னாள் மாநகராட்சி ஊழியர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சை பெற வந்தவர்களிடம் 20 ஆயிரம் கட்டணம் வசூல் செய்திருப்பதும், மாநில மனநல ஆணையத்திடம் அனுமதி பெறாமல் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்ததும் விசாரணையில் வெளி வந்துள்ளது. 

இதனையடுத்து ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய லோகேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் கார்த்திகேயன் இருவரையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வரும் நிலையில், வருவாய்த்துறையினர் அந்த மையத்திற்கு சீல் வைக்க உள்ளனர்.