அம்மா கோவிலில் வழிபட விட மாட்றாங்க! வாங்க யாரு தடுக்கிறாங்கன்னு பார்க்கலாம் - மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர்
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தண்ணீர் தொட்டியில் மலம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வேங்கைவயல் என்ற கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குடிநீரை பருகிய குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தைகள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடிநீரில் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் குடிநீரை சோதனை செய்து பார்த்த போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கழித்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள் உடனடியாக அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
தகவலை அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் குடிநீர் தொட்டி மீது ஏறி பார்க்கும் போது மலம் கழித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தொட்டியில் இருந்த தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு தண்ணீரை மாற்றியுள்ளனர். இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கிராமத்தில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார்.
அப்போது பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
கோவிலுக்கு கெத்ததாக கூட்டிச் சென்ற மாவட்ட ஆட்சியர்
அதில், தங்கள் பகுதியில் உள்ள கோயில்களில் பிற சமூக மக்கள் தங்களை சாமி கும்பிட அனுமதிப்பதில்லை என்றனர்.
இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தார்.
பின்னர் பிற சமூக மக்களிடம் விசாரணை மேற்கொண்டார் ஆட்சியர் அப்போது பிற சமூக மக்கள் தாங்கள் யாரும் பட்டியலின மக்களை வர வேண்டாம் என சொல்லவில்லை அவர்கள் தான் வருவது இல்லை என்றனர்.
ஆட்சியர் கவிதா ராமு அவர்களிடம் சாமி என்பது அனைவருக்கும் சமமானது என்று தெரிவித்தார்.
சாமி கும்பிட மகிழ்ச்சியில் பட்டியலின் மக்கள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித்தா பாண்டேவுக்கு நன்றி தெரிவித்தனர்.