"நோட்டாவிற்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறு தேர்தல் நடத்தலாம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

government court vote federal reelection
By Jon Mar 15, 2021 02:30 PM GMT
Report

தேர்தலில் யாருக்கும் வாக்கு செலுத்தாத வாக்காளர்கள் (None Of The Above) வாக்களிக்கும் வகையில் நோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முறையைத் தேர்தல் ஆணையம் இதை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, யாரையும் விரும்பாத மக்களின் உரிமை இதன்மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

நோட்டாவுக்கு விழும் வாக்குகள் எதுவும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கான அதிகாரம் என்பது துளியும் இல்லை. நிலைமை இப்படியிருக்க சில இடங்களில் வேட்பாளர்கள் வாங்கும் வாக்குகளை விட நோட்டாவிற்கு அதிகமாக வாக்குகள் விழுகின்றன. இவ்வாறு விழும் வாக்குகளுக்கென்று எந்த அதிகாரமும் கிடையாது.

இதனால், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவானால், அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவானால் மறுதேர்தல் நடத்துவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.