புதுச்சேரியில் மதுபான கடை விற்பனை நேரம் குறைப்பு
புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து மதுபான கடையின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று வெளியிட்டார். இதன்படி, வருகிற ஏப்ரல் 6ந்தேதி புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இரவு 11 மணி வரை மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மறுஅறிவிப்பு வரும் வரை இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுபான குடோன்களில் இருந்து மதுபான கடைகளுக்கு காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் என கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று, மதுபான கடையை தவிர்த்து, வேறு எந்த இடத்திலும் மதுபானங்களை வைத்திருக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.