“இனி எல்லா படமும் எங்களுக்கு தான்” - சர்ச்சையை கிளப்பும் உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் மீண்டும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் முழுவீச்சில் பட தயாரிப்புகளிலும், தியேட்டர் விநியோக உரிமையிலும் களமிறங்கியுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இந்நிறுவனம் அதன்பிறகு ஏராளமான படங்களை தயாரித்தும், தியேட்டர் விநியோக உரிமையிலும் ஈடுபட்டு வந்தது.
இதனிடையே சமீப காலமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்க உரிமைகளை கைப்பற்றி வருகிறது. குறிப்பாக ரஜினியின் அண்ணாத்த, கமலின் விக்ரம், விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சிவகார்த்திகேயனின் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களின் திரையரங்க உரிமைகளை கைப்பற்றியது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இப்படியே சென்றால் மற்ற தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள் என்ற எதிர்ப்பு குரலும் எழத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் மற்ற தயாரிப்பாளர்களும் முன்னணி ஹீரோக்களின் படங்களின் உரிமைகளை வாங்கினால் இப்படி தான் சொல்வீர்களா என உதய்க்கு ஆதரவாக கருத்து எழுந்துள்ளது.
ஏற்கனவே 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன் மூவிஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் போன்ற திமுகவின் குடும்ப நிறுவனங்கள் முழுவீச்சில் பட தயாரிப்பிலும், திரையரங்க உரிமைகளையும் கைப்பற்றி பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.