ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது, சென்னையில் ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை. அதி கனமழை ரெட் அலர்ட் நீக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் காற்றுக்கான ரெட் அலர்ட் நடைமுறையில் உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் உள்ளது என விளக்கினார்.
மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் துரிதமாக செயல்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ராமச்சந்திரன்,
சென்னை மாநகராட்சிக்கு மீட்பு பணிக்காக 48 படகுகள் அனுப்பி உள்ளதாகவும், சென்னை நகரில் மட்டும் 44 முகாம்களில் பேர் 2244 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
சென்னை நகரில் மட்டும் 523 இடங்களில் நீர் தேங்கியுள்ளது. நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுரங்கப் பாதைகளில் உள்ள நீரை வெளியேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அங்கு 185 நிவாரண முகாம்கள் அமைத்துள்ளதாகவும், அதில் 10,073 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.