இளம் வயதினரிடையே ஏற்படும் திடீர் மரணம் - கொரோனா தடுப்பூசிக்கு தொடர்பா?
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் மூலம் செய்யப்பட்ட ஆய்வொன்றின் முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் வெளியாகியுள்ளது.
திடீர் மரணம்
ஐ.சி.எம்.ஆர் மூலம் மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை செய்யப்பட்ட அந்த ஆய்வில், 2,214 பிரேத பரிசோதனைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. அதில் 8.1% பேருக்கு திடீர் மரணம் ஏற்பட்டிருந்தது. இதில் சுமார் 57.2% பேர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்துள்ளனர்.

சராசரி வயது 33.6 என்றும், திடீர் மரணம் ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாகவும் இருந்துள்ளனர். திடீர் மரணங்களில் சுமார் 42.6% மரணங்கள், இதயப் பிரச்னைகளால் ஏற்பட்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
என்ன காரணம்?
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, ஏற்கெனவே ரத்த அடைப்புடன் கூடிய தீவிர இதயத்தமனி பிரச்னைகள் இருந்ததாகவும் அதை முன்கூட்டியே அவர்கள் கண்டுபிடிக்காததால் இறப்பு ஏற்பட்டதாகவும் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 46 – 65 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 70% பேருக்கு கொரனரி இதய பாதிப்புகளால் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளன. ஒருசிலருக்கே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நீடித்த பிரச்னைகள் இருந்துள்ளன. ஆனால் பாதிக்கும் மேற்பட்டோருக்கு புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் இருந்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசிக்கோ, கொரோனா தொற்றுக்கோ இந்த இறப்புகளில் தொடர்பிருப்பது ஆய்வில் உறுதியாகவில்லை. இளம் வயதிலேயே அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
எந்தவொரு அறிகுறியையும் உதாசீனம் செய்யக்கூடாது, புகை மற்றும் மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.