இதனால் தான் ஜெர்சி நம்பர் 7ஐ தேர்வு செய்தேன் - தோனி சொன்ன டாப் சீக்ரெட்!
மகேந்திர சிங் தோனி ஏன் 7 என்ற எண்ணை தேர்வு செய்தார் என்பது குறித்து பேசியுள்ளார்.
ஜெர்சி நம்பர் 7
கிரிக்கெட்டில் நமக்கு பிடித்த விளையாட்டு வீரர்களை போல், அவர்கள் அணிந்திருக்கும் ஜெர்சிகளில் உள்ள எண்ணும் நம்மை ஈர்க்கும். கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகளில் ஒவ்வொரு வீரர்களும் அவர்களுக்கான தனித்துவமான ஜெர்சி எண்ணினால் அறியப்படுகிறார்கள்.
உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் என்றாலே அவரது 10 என்ற ஜெர்சி நம்பர் தான் நினைவில் வரும். சச்சின் டெண்டுல்கர் உலக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அந்த நம்பர் யாருக்கும் வழங்கப்படாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தற்போது வரை 7 என்ற ஜெர்சி நம்பரை வைத்து சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார்.
இதனால் 7 என்ற நம்பர் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. தோனி ஏன் 7 என்ற ஜெர்சி நம்பரை தேர்வு செய்தார்? என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
தோனி பேட்டி
இதுகுறித்து ஒருமுறை இந்தியா சிமெண்ட்ஸ் நடத்திய விர்ச்சுவல் உரையாடலின் போது ரசிகர்களிடம் பேசிய தோனி ' 7 என்பது தனது இதயத்திற்கு நெருக்கமான எண்ஆகும். நம்பர் 7ன் முக்கியத்துவத்தை பற்றி பல ஆண்டுகளாக மக்கள் பேசுவதை நான் கேட்டு வருகிறேன்.
ஆரம்பத்தில் நிறைய பேர் 7 என்பது எனக்கு அதிர்ஷ்டமான என் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த என்னை நான் ஒரு எளிய காரணத்திற்காக தான் தேர்வு செய்தேன். நான் ஜூலை 7ம் தேதி பிறந்தேன், பிறந்த மாதமும் 7. இதனால் தான் ஜெர்சி நம்பர் 7ஐ தேர்வு செய்தேன். மேலும் 7 என்ற நம்பரை நான் மிகவும் நடுநிலையான எண்ணாக பார்க்கிறேன். இதற்கு பின்னால் எந்த மூட நம்பிக்கையும் இல்லை என்று தோனி பேசியுள்ளார்.