இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு
உலக அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உலக அழகிப்போட்டி
1951 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் உலக போட்டியில், இதுவரை ரீட்டா ஃபாரியா, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, யுக்தா முகி, டயானா ஹைடன், மனுஷி சில்லர் உள்ளிட்ட 6 இந்தியர்கள் பட்டம் வென்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய முன்னாள் மிஸ் இங்கிலாந்து அழகி மில்லா மேகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மே 7 ஆம் தேதி ஹைதராபாத் வந்த அவர், குடும்ப சூழ்நிலை காரணமாக மே 16 ஆம் தேதி இங்கிலாந்திற்கு திரும்ப சென்று விட்டார்.
மில்லா மாகி வெளியேறியதையடுத்து, மிஸ் இங்கிலாந்து 2024 போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த, சார்லோட் கிரான்ட்(25), இங்கிலாந்து சார்பில், உலக அழகி போட்டியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
விலைமாது போல் உணர வைத்தனர்
இந்நிலையில், இங்கிலாந்து சென்ற மில்லா மாகி அங்குள்ள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பேசிய அவர், "போட்டியில் போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.
அதை, என்னால் நம்ப முடியவில்லை. அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் வரவில்லை. அவர்களின் செயல்கள் வாயிலாக, என்னை ஒரு விலைமாதுவை போல உணர வைத்தனர்.
அவர்களை மகிழ்விப்பதற்காக, வித்தைக்காட்டும் குரங்குகளைப் போல அமர்ந்திருந்தோம். என்னால், அதைத் தாங்க முடியவில்லை. இதெல்லாம் சிறிய நிகழ்வுகள் தான்.
உலக அழகி என்ற பட்டத்துக்கென தனி மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் பழைய காலத்திலேயே சிக்கிக் கிடக்கிறது. எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே, நான் வெளியேறினேன்" என தெரிவித்துள்ளார்.