தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு - அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லும் காரணம் என்ன?

M K Stalin
By Petchi Avudaiappan Apr 20, 2022 08:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு  ஏற்பட்டது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மின் தடை ஏற்பட்டது. வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில் திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் குவியத் தொடங்கின. 

அதேசமயம் மின்வெட்டு ஆட்சிக்கும் பெயர் போன திமுக மீண்டும் தன் வேலையை காட்ட தொடங்கியதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் திடீர் மின் தடை குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். 

அவரின் பதிவில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நகர்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.