ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் பிரபலம் யார்ன்னு தெரியுதா... எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பல ஹாலிவுட், வெளிநாட்டு பிரபலங்கள் இந்தியாவுக்கு வருகை தரும் போது இங்குள்ள பிரபல நபர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் திரைப்பட விழாவில் தனது மனைவியை உருவகேலி செய்ததற்காக தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சர்ச்சையில் வில் ஸ்மித் சிக்கினார். இந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட வில் ஸ்மித் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கவும் செய்தார். தனது தவறை உணர்ந்த வில் ஸ்மித் ஆஸ்கர் உறுப்பினர் பதவியை அவரே முன் வந்து ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் எங்கே இருக்கிறார் என கேட்கும் அளவுக்கு தலைமறைவாக இருந்த வில் ஸ்மித் கடந்த வாரம் திடீரென இந்தியாவுக்கு வருகை தந்தார்.
மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், நவி மும்பை பகுதியில் உள்ள இஸ்கான் கோவில் ஒன்றில் பூஜைகளில் கலந்துகொள்வதற்காக வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.