அண்டார்டிகாவில் ஓடும் ரத்த நீர்வீழ்ச்சி - 115 வருட ரகசியம் இதுதான்
அண்டார்டிகாவில் ஓடும் ரத்த நீர்வீழ்ச்சி குறித்த ரகசியம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அண்டார்டிகா
முழுக்க முழுக்க பனி பாறைகளால் மூடப்பட்ட அண்டார்டிகா, பூமிப்பந்தில் பல்வேறு ரகசியங்களை வைத்துள்ளது. பல ஆண்டுகாலமாக விஞ்ஞானிகள் இந்த பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நூறாண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் ரத்த நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த நீர்வீழ்ச்சி
அண்டார்டிகாவின் மெக் மெர்டோ பள்ளத்தாக்கில், டாய்லர் ஃகிளாஸியோ என்ற அருவி உள்ளது. 1911 ஆம் ஆண்டு ஹிரிஃபித் டாய்லர் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் இந்த அருவியைக் கண்டுபிடித்தததால் அவரது பெயரே இந்த அருவிக்கு சூட்டப்பட்டது. இந்த அருவியில் இருந்து பாய்ந்துவரும் தண்ணீரானது, அடர் சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு ரத்தம் கூட்டுவது போல் இருப்பதால் இந்த அருவியை ரத்த அருவி என்று அழைத்துவருகின்றனர்.
அண்டார்டிக்காவின் இந்த பகுதியில் மட்டும் இது போல் ரத்த நிறத்தில் அருவி கொட்டுவது எப்படி என விஞ்ஞானிகள் தலையை பிய்த்துக்கொண்டிருந்தனர். ஜில் மிக்கூக்கி என்ற ஆராய்ச்சியாளர், இது தொடர்பாக செய்த ஆய்வில் இந்த ரத்த நிறத்திற்கான காரணத்தை கண்டறிந்துள்ளார்.
இந்த நீரில் ஆக்சிஜன் மூலக்கூறு மிக குறைவாக உள்ளதோடு, 17 வகையான நுண்ணுயிரிகள் வாழ்ந்துவருகின்றன. மேலும் இங்கு அதிகப்படியாக இரும்புத் தாதுகள் உள்ளன. நுண்ணுயிரிகளில் இருந்தது வெளியேறும் சல்பரானது இரும்புத்தாதுவுடன் வினைபுரிந்து சிவப்பு நிற நீரை உண்டாக்குவதாக தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.
உப்பின் அளவு
மேலும், 0 டிகிரி செல்சியசிலே நீர் பனிக்கட்டியாக மாறும் நிலையில், அன்டார்டிகாவில் மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் நிலவும் போது, நீர் பனிக்கட்டியாக மாறாமல் நீர்வீழ்ச்சியாக இருப்பதும் அதிசயமாக இருந்தது. இது தொடர்பான ஆராய்ச்சியில், இந்த பகுதியில் உள்ள நீரில், கடல் நீரில் இருப்பதை விட 2 மடங்கு அளவு அதிக உப்பு இருப்பதால் நீர் பனிக்கட்டியாக மாறாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சி 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இருக்கலாம் என்றும், இந்த பகுதி செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலையை ஒத்திருப்பதால் இதை ஆய்வு செய்தால் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்விலும் பல விசயங்கள் தெரிய வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.