எச்சரித்த உச்ச நீதிமன்றம: 'மரண தண்டனையும் ஏற்க தயார்' - பதஞ்சலி பாபா ராம்தேவ்!
நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் மரண தண்டனையும் ஏற்க தயார் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி நிறுவனம்
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேத பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.
இதுபோன்ற தவறான விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம்.
மீறினால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாபா ராம்தேவ்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது "பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி பிரசாரம் செய்யப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உள்ளோம். நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். மரண தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார். மேலும், ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிரான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.