எடப்பாடி உத்தரவு போட்டா நாங்க 1000 பேர் யுத்த களத்தில் சண்டையிட தயார் - ராஜேந்திர பாலாஜி
1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
போர்களத்திற்கு தயார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து பயங்கரவாதத்தை ஒடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாரட்டுகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை நாங்கள் முழு மனதோடு பாராட்டுகிறேன்.
ராஜேந்திர பாலாஜி பேச்சு
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டளைப்படி நடக்கும் நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிசாமி உத்தரவு கொடுத்தால் யுத்த களத்தில் பணியாற்றவும் தயாராக உள்ளோம். போர்க்களத்தில் போரிட இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான 10 நாட்கள் பயிற்சி பெற்று எனது தலைமையில் போர்க்களத்தில் போரிட செல்வதற்காக 1000 இளைஞர்கள் தயாராக உள்ளோம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும். அதிமுகவினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக யுத்த களத்திற்கு இளைஞர்கள் தேவை என்று சொன்னால் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.