அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்... ராஜஸ்தானை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு அணி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்சி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் கண்ட ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 70, ஹெட்மேயர் 42, தேவ்தத் படிக்கல் 37 ரன்களும் விளாச அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.
இதனைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணியில் கேப்டன் டூபிளெஸிஸ் 29, அஜய் ராவத் 26 ரன்களும் எடுத்து அவுட்டாக பின்னர் வந்த கோலி 5, ரூதர்போர்டு 5, டேவிட் மில்லே ரன் எதும் எடுக்காமலும் அவுட்டாயினர்.
இதனால் பெங்களூரு அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் - -ஷபாஸ் அகமத் ஜோடி 77 ரன்கள் குவித்து அசத்தியதோடு வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. தினேஷ் கார்த்திக் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் ஷபாஸ் அகமது 45 ரன்களில் அவுட்டானார்.
இதன்மூலம் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.