குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு ... ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய 2 அணிகள்...
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே குஜராத், லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள 2 இடங்களுக்கு டெல்லி, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய பெங்களூரு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 62, டேவிட் மில்லர் 34 ரன்களும் விளாச குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஜோடி சிறப்பாக ஆடியது. கேப்டன் பாப் டூபிளெசிஸ் 44 ரன்களில் அவுட்டாக சிறப்பாக விளையாடிய விராட் கோலி 73 ரன்களும், தொடர்ந்து களம் கண்ட மேக்ஸ்வெல் 44 ரன்களும் விளாச 18.4 ஓவர்களில் பெங்களூரு 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. நாளை நடைபெறும் டெல்லி - மும்பை இடையிலான போட்டியில் டெல்லி தோற்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது அதேசமயம் பெங்களூரு அணியின் வெற்றியால் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.