சிக்ஸ் அடித்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி - டெல்லிக்கு தோல்வியை பரிசளித்த பெங்களூரு
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டில் 'திரில்' வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களான தவான் 43 ரன்களும், பிரித்வி ஷா 48 ரன்களும், ஹெட்மேயர் 29 ரன்களும் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி 4 ரன்களிலும், படிக்கல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகி ஆரம்பமே அதிர்ச்சியளித்தனர்.
தொடர்ந்து களம் கண்ட பரத் 78 ரன்கள் விளாச கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது.ஆவேஷ் கான் வீசிய முதல் மூன்று பந்தில் பவுண்டரி உட்பட 7 ரன் மேக்ஸ்வெல் எடுத்து அரைசதம் கடந்தார். பரத் அடுத்த இரு பந்தில் 3 ரன் எடுத்தார். கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில் பரத் சிக்ஸ் அடிக்க பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்த பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணியை அக்டோபர் 11 ஆம் தேதி மோதுகிறது.