பெங்களூரு அணிக்கு ராசியில்லாத ஏப்ரல் 23 ஆம் தேதி - ஏன் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி மிகவும் மோசமாக தோல்வி அடைந்த நிலையில் மற்றொரு சோக சம்பவமும் ரசிகர்களை வாட்டி வதைத்து வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 36வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் ஹைதராபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட ஹைதராபாத் அணி 8 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியின் தோல்வி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதே ஏப்ரல் 23 ஆம் தேதி அவர்களுக்கு ராசியில்லாத நாளாக அமைந்து வருகிறது என்பது உச்சக்கட்ட சோகத்தில் தள்ளியுள்ளது. காரணம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை எடுத்திருந்தது. இந்த போட்டியில் கிறிஸ் கெயில் 175 ரன்கள் அடித்து ருத்ர தாண்டவம் ஆடியிருந்தார்.
ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். இப்படி ஒரு மகத்தான சாதனைக்குப் பின் 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு ஆடியது. ஆனால் எதிர்பாராதவிதமாக 49 ரன்களில் ஆல் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதல் பந்திலேயே கோலி ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து இதே ஏப்ரல் 23 ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 68 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த போட்டியிலும் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இனிமேல் வரும் சீசன்களில் பெங்களூரு அணிக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி போட்டி வைக்க வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.