முக்கிய வீரர்களை எல்லாம் ஏலத்தில் கோட்டைவிட்ட ஆர்சிபி - கொதித்த ஜாம்பவான்!
ஆர்சிபி நல்ல வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் கோட்டைவிட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
ஏலத்தில் ஆர்சிபி
ஐபிஎல் 2025 ஏலத்தின் முதல் நாளில் பெங்களூர் அணி 6 வீரர்களை எடுத்துள்ளது. இன்று இரண்டாம் நாள் ஏலம் நடக்கிறது. இதில் பெங்களூர் அணியின் ஏல யுக்தி சர்ச்சையாக வெடித்துள்ளது.
பெங்களூர் அணி நிர்வாகம் இந்தாண்டு மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. விராட் கோலி 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்த நிலையில், ரஜத் படிதார் ரூ.11 கோடிக்கும், யாஷ் தயாள் ரூ 5 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெடித்த சர்ச்சை
ஆர்சிபி அணிக்குக் கடந்தாண்டு வரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் இருந்தார். அவர் கடந்தாண்டு உடன் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்திற்கு ராகுலை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை எடுக்கவில்லை. இந்த முடிவைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆர்சிபி அணிக்கு ஒரு நல்ல கீப்பர் பேட்டர் தேவைப்பட்டது. ராகுலை மீண்டும் ஒரு குறைந்த விலையில் எடுக்கச் சிறந்த வாய்ப்பு அமைந்தது. ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.
அவர்களின் உத்தி குழப்பமானது.. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் பாவமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். முதல் நாள் ஏலத்தில் பெங்களூர் அணி எடுத்த வீரர்களின் விபரம்: லியாம் லிவிங்ஸ்டோன் (ரூ 8.75 கோடி), பில் சால்ட் (ரூ 11.50 கோடி), ஜிதேஷ் சர்மா (ரூ 11 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (ரூ 12.5 கோடி), ரசிக் தார் (ரூ 6 கோடி), சுயாஷ் சர்மா (ரூ 2.6 கோடி).