பெங்களூரிடம் வாங்கிய அடி - புள்ளி பட்டியலில் அதள பாதாளத்திற்கு சென்றது மும்பை இந்தியன்ஸ்: ரசிகர்கள் சோகம்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு மேக்ஸ்வெல் 56 ரன்களும், கோலி 51 ரன்களும், பாரத் 32 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 165 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா 43 ரன்களும், டி காக் 24 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கம் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்துவிட்டாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

பொலார்டு, ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் கடைசி மூன்று ஓவர்களில் போட்டியை மாற்றிவிடுவார்கள் என மும்பை ரசிகர்கள் காத்திருந்த நிலையில், போட்டியின் 17வது ஓவரை வீசிய ஹர்சல் பட்டேல் அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொலார்டு ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றியது இல்லாமல், ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் 18.1 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியும் அடைந்துள்ளது.

இந்தநிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான இந்த படுதோல்வியின் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. பெங்களூர் அணி 3வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்