2023 ஐபிஎல் தொடரில் இணையும் ஓய்வு பெற்ற பிரபல வீரர்... எந்த அணி தெரியுமா?
அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று அதிரடி பேட்ஸ்மேனும், முன்னாள் பெங்களூரு அணியின் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
இதனிடையே அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று முன்னாள் பெங்களூரு அணியின் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஏபி டிவில்லியர்ஸ் அறிவித்தார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து புது கேப்டன் பாப் டூபிளெசிஸ் தலைமையிலான நடப்பாண்டு பெங்களூரு அணி ஒருவழியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனால் அந்த அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம் பெற்ற டிவில்லியர்ஸ் ரசிகர்களால் மிஸ்டர் 360 என செல்லமாக அழைக்கப்படுவார். 11 சீசன்களில் விளையாடி உள்ள அவர் 156 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 4,491 ரன்கள் குவித்துள்ளார். டிவில்லியர்ஸ் வரவுள்ளதாக ஏற்கனவே விராட் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் நிச்சயமாக அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன். ஆனால் எந்த பொசிஷனில் இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.