'' தோல்வியடைந்ததற்கு இது மட்டும் தான் காரணம் '' - டூபிளசிஸ் வேதனை

rcb ipl2022 punjabking
By Irumporai Mar 28, 2022 10:34 AM GMT
Report

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டது தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் தெரிவித்துள்ளார்

15வது ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டூபிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41* ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர். 205 ரன்கள் குவித்துவிட்டதால், பெங்களூர் அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெங்களூர் அணி தனது மோசமான பந்துவீச்சால் ரன்களை வாரி வழங்கியதால் இமாலய இலக்கை 19வது ஓவரிலேயே இலகுவாக எட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முகமது சிராஜ், ஹசரங்கா போன்ற பந்துவீச்சாளர்கள் அதிகமான ரன்களை விட்டுகொடுத்ததும், மோசமான பீல்டிங்குமே பெங்களூர் அணியின் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், பஞ்சாப் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், மோசமான பீல்டிங் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “10 ரன் இருக்கும் போது ஒடியன் சுமித் கேட்சை தவறவிட்டோம். அவர் உண்மையிலேயே மிகவும் சிறந்த அதிரடி வீரர் ஆவார். வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது அவசியமாகும். கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெற வைக்கிறது.

பேட்டிங்கில் நாங்கள் மிக சிறப்பாகவே செயல்பட்டோம் என கருதுகிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளை சரி செய்து கொண்டு சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்தார்.