ஏமாற்ற நினைத்த பெங்களூரு அணி... கடைசி நேரத்தில் கண்டுபிடித்த அம்பயர்
குஜராத் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி செய்த காரியம் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பின்னர் 171 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.
அந்த அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனிடையே இப்போட்டியில் 2வதாக குஜராத் அணி பேட் செய்த போது எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது.
குஜராத்தின் தொடக்க வீரர்கள் விருதிமான் சாஹா - சுப்மன் கில் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அச்சுறுத்தல் தந்த நிலையில் அவர்களை பிரிக்க பெங்களூரு பவுலர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர். அந்த வகையில் ஆட்டத்தின் 9வது ஓவரை வீசிய சபாஷ் அகமது வீசிய வைட் லைன் பந்தை, சுப்மன் கில் அடிக்க முயன்ற போது அது தவறியது.
ஆனால் அது எட்ஜ் கேட்சானதாக கூறி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அம்பயரிடம் அவுட் கேட்டு கத்தினார். களத்தில் இருந்த அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்மன் கில் 3வது அம்பயரிடம் முறையிட்டார். இதில் பந்தானது சுப்மன் கில்லின் பேட்டில் எட்ஜாகவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் விக்கெட் கீப்பரின் க்ளவுஸ் ஸ்டம்பை தாண்டி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
அதாவது விக்கெட் கீப்பர் ஸ்டம்ப்பை தாண்டி கைகளை நீட்டினால் அது நோ பால் என அறிவிக்கப்படும். அந்தவகையில் இதற்கு நோ பால் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.