ஜெயிச்சது மும்பை தான்... ஆனால் பிளே ஆஃப் போனது பெங்களூரு - ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யம்
ஐபிஎல் தொடரில் மும்பை அணி போட்டியில் ஜெயித்ததன் காரணமாக பெங்களூரு அணி தனது பிளே ஆஃப் கனவை நிறைவேற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோமென் பவல் 43, கேப்டன் ரிஷப் பண்ட் 39, ப்ரித்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் இஷான் கிஷன் 48, டிவால்ட் ப்ரிவிஸ் 37, டிம் டேவிட் 34 ரன்கள் விளாச 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லியை மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டி இந்த சீசனில் மிக முக்கிய போட்டியாக பார்க்கப்பட்டது. காரணம் குஜராத், லக்னோ, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த நிலையில் சென்னை,மும்பை, ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் 4வது இடத்துக்கு பெங்களூரு, டெல்லி அணிகள் இடையே போட்டி நிலவியது. இதில் பெங்களூரு அணி 14 போட்டிகளிலும் விளையாடி விட்டதால் டெல்லி- மும்பை போட்டியின் முடிவே தங்களது பிளே ஆஃப் கனவுக்கான வழி என்ற நிலைக்கு வந்தனர்.
ஆனால் இப்போட்டியில் மும்பை அணி எளிதாக வெற்றி பெற டெல்லி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் பிளே ஆஃப் போனது பெங்களூரு அணி. இருந்த போதிலும் பிளே ஆஃப் போட்டியில் பெங்களூரு அணி வழக்கம் போல ஈ சாலா கப் நமதே என சொல்லிக்கொண்டு தோற்றுப்போகாமல் மும்பை செய்த உதவியை மனதில் நினைத்தாவது வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.