புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் ரிசர்வ் வங்கி - இனி பழைய நோட்டுகள் செல்லாதா?
ரிசர்வ் வங்கி புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது.
சஞ்சய் மல்ஹோத்ரா
ரிசர்வ் வங்கி புதிதாக 50 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவி ஏற்றார்.
புதிய ரூ.50 நோட்டு
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள், பாதுகாப்பை மேம்படுத்தவும், கள்ளநோட்டுகளைத் தடுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி (புதிய) வரிசையின் கீழ் தொடரும்.
இந்த 50 ரூபாய் நோட்டின் அளவு 66 மிமீ x 135 மிமீ மற்றும் அதன் அடிப்படை நிறமாக ஃப்ளோரசன்ட் நீலம் இருக்கும். நோட்டின் முன்பக்கத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், பின்புறத்தில் கலாச்சார கருத்துகளும் பொறிக்கப்பட்டிருக்கும். ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்து தான் நோட்டில் உள்ள மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மாற்றப்படும் போது உள்ள வழக்கமான நடைமுறைதான் இது. இதனால் பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என மக்கள் குழப்பமடைய வேண்டாம். புதிய நோட்டுகளுடன், பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.