இனி வெள்ளிக்கும் வங்கிக்கடனா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி
தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களும் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெள்ளிக்கு வங்கிக்கடன்
இந்த சூழலில், தங்கத்தை போல் வெள்ளிக்கும் வங்கிகள் நகைக்கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதியானது, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

இதன்படி,வெள்ளி நாணயம் மற்றும் வெள்ளி நகைகளை வைத்தும் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், தங்க, வெள்ளி கட்டிகள் மற்றும் தங்க பத்திரங்களுக்கு கடன் பெற முடியாது. மேலும், ஏற்கனவே அடகு வைத்த நகைகளை மறு அடமானம் வைத்து அதன் மீது கடன் பெற முடியாது.

அதேபோல், தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளது. அதாவது, 1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு கடன் பெற்றால், இனி ரூ.85,000 வழங்கப்படும்.
எவ்வளவு நகை வரை கடன்?
அதேபோல் எவ்வளவு நகைகளுக்கு வைத்து கடன் பெறலாம் என்பதற்கு உச்சவரம்பு வைத்துள்ளது.
தங்க நகைகள் - 1 கிலோ வரை

தங்க நாணயங்கள் - 50 கிராம் வரை
வெள்ளி நகைகள் - 10 கிலோ வரை

வெள்ளி நாணயங்கள் - 500 கிராம் வரை
ரூ.5000 இழப்பீடு
கடன் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தி விட்டால், 7 நாட்களுக்குள் நகையை அவரிடம் திரும்ப வழங்க வேண்டும். அதற்கு தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு நாளும் ரூ.5000 இழப்பீடு வழங்க வேண்டும்.

அதே போல், அடமானம் வைத்திருந்த காலத்தில், நகைகளில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால், கடன் வழங்கியவர், கடன் வாங்கியவருக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.
அனைத்து கடன் விதிமுறைகள் மற்றும் மதிப்பீட்டு விவரங்களும் கடன் வாங்குபவரின் விருப்பமான அல்லது உள்ளூர் மொழியில் வழங்கப்பட வேண்டும். கடன் வாங்குபவர் படிப்பறிவற்றவராக இருந்தால், இந்த விவரங்கள் சாட்சியின் முன்னிலையில் பகிரப்பட வேண்டும்.