ATM இல் இனி இதை செய்ய முடியாது - அமலுக்கு வந்துள்ள புதிய விதி
மோசடிகளை தடுக்க நாடு முழுவதும் ஏடிஎம்மில் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
ஏடிஎம்
நாட்டில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறி விட்டாலும், சில அத்தியாவசிய தேவைகளுக்கு இன்னும் மக்கள் பணத்தை ரொக்கமாகவே பயன்படுத்துகின்றனர்.
வங்கி சென்று காத்திருப்பதை விட ATM மூலமாக சுலபமாக பணத்தை எடுக்க முடிகிறது. ஆனால் சமீபகாலமாக மோசடியாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் புது வித மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
புதிய மோசடி
மோசடியாளர்கள், ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளிவரும் இடத்தில் போலி கார்டு ஒன்றை வைக்கின்றனர். அந்த சமயத்தில் ஏடிஎம்மில் யாராவது பணத்தை பெற முயற்சிக்கும் போது, பணம் வெளியே வராமல் இடையில் சிக்கிக்கொள்ளும்.
ஏடிஎம்மில் பணம் இல்லை என நினைத்து வாடிக்கையாளர்கள் திரும்பி சென்றுவிடுவார்கள். ஆனால் உண்மையில் பணம் வெளியே வந்து பாதியில் இருக்கிறது. வாடிக்கையாளர் வெளியே சென்றவுடன் மோசடியாளர்கள் போலி கார்டை எடுத்துவிட்டு, அதில் உள்ள பணத்தை எடுத்து கொள்கின்றனர்.
30 வினாடி
இதனால் வங்கிக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படும் நிலையில் இந்த மோசடியை தடுக்க புதிய விதி ஒன்றை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இனி ஏடிஎம்மிலிருந்து பணம் வெளியே வந்து 30 வினாடிகளுக்குள் பணத்தை எடுக்காமல் விட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்று விடும்.
உள்ளே சென்ற தொகை மீண்டும் வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு வேலை நீங்கள் பணம் எடுக்க முயலும் பொழுது, பணம் வெளியில் வரவில்லை என்றால், உடனே உங்கள் பேங்க் பேலன்ஸை செக் செய்யுங்கள். 24 மணி நேரத்திற்குள் பணம் வரவு வைக்கப்படும்.