விதியை மீறிய பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.1.80 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி
வங்கி சட்டத்தை மீறி செயல்பட்டதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் வாங்கிய நிறுவனங்களின் பங்குகளை அளவுக்கு மீறி வைத்திருந்ததால் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949ஐ பஞ்சாப் நேஷனல் வங்கி மீறியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூபாய் 1.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கி சட்டப்படி, கடன் வாங்கிய நிறுவனத்தின் பங்குகளை 30 விழுக்காடுக்கு மேல் வைத்துக்கொள்ளக்கூடாது. ஆனால், 30 விழுக்காடுக்கு மேல் பங்குகளை பஞ்சாப் நேஷனல் வங்கி கையில் வைத்திருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதனால் அந்த வங்கியின் பங்குகள் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.