உங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறதா? கவலை வேண்டாம் - ரிசர்வ் பேங்க் சொன்ன குட் நியூஸ்
நாளை முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ள ரிசர்வ் வங்கி சில முக்கிய அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார்.
அந்த வகையில் இன்று முதல் 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மக்கள் இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அப்போது சிலர் மயக்கமடைந்து உயிரிழந்தனர்.
இதன் பின்னர் புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. ஆனால் இதை எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அச்சடிப்பு பணி நிறுத்தம்
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை எதிர்பார்த்ததை விட இந்த நோட்டுகளின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாக இருந்தது.

2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி 2018 - 2019 ஆம் ஆண்டு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் துாய்மையான ரூபாய் தாள் கொள்கையின் படி இந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
மே 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அதிரடி அறிவுரை
அதன் படி நாளை முதல் வங்கிகளில் மக்கள் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ளலாம்.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு வங்கிகள் குடிநீர், நிழலில் காத்திருக்கும் வசதி போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும்.
மேலும் வங்கிகளில் மாற்றப்படும் 2000 ஆயிரம் நோட்டுகள் குறித்த அன்றாட தரவுகள் பராமரிக்கப்பட வேண்டும். இந்த விவரங்கள் எப்போது கேட்கப்பட்டாலும் அப்போது கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.