முதல்வர் விஜய் இதை செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் - ஆர்.பி உதயகுமார் சவால்
விஜய் இதை செய்தால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என ஆர்.பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
ஆர்.பி உதயகுமார் சவால்
மதுரையில் நடைபெற்ற அதிமுக தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முதல்வர் விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், "தற்போது உள்ள முதலமைச்சர் விஜய் நான் 5 நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே மு.க ஸ்டாலினை கொத்து புரோட்டா ஆக்கிவிட்டார்கள் என்கிறார். எவ்வளவு அநாகரிகமான பேச்சு?
ஓடு, ஓடு, ஓடு என விமர்சிக்கிறார். யார் கரூரிலிருந்து முதலில் தப்பித்து ஓடியது என்று எல்லோருக்கும் தெரியும். கரூரை யார் சுடுகாடு ஆக்கினார்கள் என்பது தெரியும்.
எடப்பாடி பழனிசாமி ஒரு கருணையின் வடிவம். விஜயை சட்டசபையில் வைத்தே உரித்திருக்கலாம். ஆனால் இவர் அவருக்கு வக்காலத்து வாங்கி அவருக்காக பேசினார்.
இப்போது அவர் நம்மை பார்த்து தூர்ந்துபோன சக்தி என கூறுகிறார். அதிமுகவின் பெயரைச் சொல்லி தூர்ந்துபோன சக்தி எனக்கூற முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா? சொல்லமாட்டார்.
ஏனெனில் அதிமுக எம்.எல்.ஏக்களைத்தானே குதிரைப் பேரம் நடத்தி வளைத்து கொண்டு இருக்கின்றார். இந்தக் களவாணி, திமுகவும் - அதிமுகவும் கூட்டு எனக் கூறுகிறது.
நான் இந்த தொழிற்சங்கக் கூட்டத்தில் சவால் விடுத்துக் கூறுகிறேன். விசில் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து நீங்கள் அவர்களின் பெயரை சரியாக கூறிவிட்டால் நான் இந்த பொது வாழ்க்கையில் இருந்தே விலகி விடுகிறேன்" என பேசியுள்ளார்.