ஓய்வு பெறுகிறாரா ரவீந்திர ஜடேஜா? - அவரே சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறப்போகிறார் என்ற தகவல் வெளியான அதற்கு ட்விட்டர் பதிவு மூலம் அவர் பதில் அளித்துள்ளார்.
இந்திய அணி வரும் டிசம்பர் 16 ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் பெயர் இடம் பெறவில்லை.
இதனிடையே நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் பரவியது. நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை மிகப்பெரிதாக இருப்பதால் சுமார் 7 மாதங்கள் வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என கூறப்பட்டது.
முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் கிட்டத்தட்ட 2200 ரன்கள் வரையிலும், பந்துவீச்சில் 232 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அவர் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பரவிய அனைத்து செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சியை அணிந்துள்ள அவர் “லாங் வே டூ கோ” என்று அதில் பதிவிட்டுள்ளார்.அதற்கு இன்னும் நிறைய தூரம் நான் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பது அர்த்தமாகும். தற்போது 33 வயதாகும் ஜடேஜா நிச்சயம் 37-38 வயது வரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
Long way to go???? pic.twitter.com/tE9EdFI7oh
— Ravindrasinh jadeja (@imjadeja) December 15, 2021