ஜடேஜா அச்சுறுத்தலாக இருப்பார் ;ஜட்டுவை கண்டு அஞ்சும் மொயின் அலி
நெருக்கடியான நேரத்தில் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை இந்திய அணியினர் வெளிப்படுத்தக் கூடியவர்கள். அதிலும் ரவீந்திர ஜடேஜா மிகப்பெரிய அச்சுறுத்தலாக கடைசி நாளில் இருப்பார் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் அடுத்த 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது கடைசி நாளான இன்று ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இன்று கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. இன்னும் 291 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெறும். கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன.
ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும், பந்துவீச்சில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனப் பல முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அணி வீரர்கள் நெருக்கடி நேரத்தில் சிறப்பாக விளையாடுவார்கள் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் மொயின் அலி அளித்த பேட்டியில் கூறுகையில், 'ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர் இருக்கும்போது ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதிலும் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கடைசி நாளில் இருப்பார்.
ஓவல் ஆடுகளம் தட்டையானது என்றாலும் சிறப்பாக இங்கிலாந்து வீரர்கள் பேட் செய்து வருகின்றனர். நெருக்கடியான நேரங்களில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். முதல் 15 ஓவர்கள் வரை அவர்கள் விளையாடியதைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது. பேட்டிங்கில் மிகவும் ஒழுக்கத்துடன் ஷாட்களை ஆடினர்.
இந்தத் தொடரில் இதற்கு முன்பும் இதுபோல் இவர்கள் இருவரும் விளையாடியுள்ளார்கள். சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் இந்த டெஸ்ட் போட்டியை வெல்வோம்' எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அளித்த பேட்டியில், ' எந்த ஸ்கோரையும் சேஸிங் செய்வதற்கு ஏற்ற ஆடுகளமாக இருக்கிறது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் நிச்சயம் 291 ரன்கள் இலக்கை அடைய முடியும்.
தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் இருவரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். கடைசி நாளிலும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் 291 ரன்களை சேஸிங் செய்யலாம்' எனத் தெரிவித்தார்.