என் மகளுக்காக ஆட்ட நாயகன் விருதை சமர்பிக்கிறேன் - ரவீந்திர ஜடேஜா உருக்கம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா தனது மகளுக்கு சமர்பித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரில் நேற்றைய முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ராகுல் திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 26 ரன்களும் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் (43), ருத்துராஜ் கெய்க்வாட் (40) ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் மொய்ன் அலியை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், கடைசி இரண்டு ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
சீனியர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை இழந்துவிட்டதால் சென்னை அணி இந்த போட்டியில் தோல்வியை தான் தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது,
ஆனால் போட்டியின் 19வது ஓவரில் ஜடேஜா தனது ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தி, 4 பந்தில் போட்டியை மாற்றியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு பேட்டிங்கில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்த ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், இந்த போட்டியில் கிடைத்த ஆட்டநாயகன் விருதை தனது மகளுக்கு சமர்பிப்பதாக ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.