அஸ்வின் கணக்கு தப்பா இருக்கு - கவாஸ்கர் விமர்சனம்

கடைசி ஓவரில் கேகேஆர் பேட்ஸ்மேனின் நோக்கத்தை அஸ்வின் தவறாக எடைபோட்டு விட்டார் என முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பரபரப்பான முறையில் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

வெங்கடேஷ் ஐயர் 55 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது. ஒருகட்டத்தில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 25 பந்துகளில் 13 ரன்களே தேவைப்பட்டன. கைவசம் 9 விக்கெட்டுகள் மீதமிருந்தன.

ஆனால் 16-வது ஓவரின் கடைசிப் பந்தில் நிதிஷ் ராணா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஆட்டத்தின் போக்கே மாறிப்போனது. அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

18 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டன. 18-வது ஓவரில் 1 ரன் மட்டும் கொடுத்து தினேஷ் கார்த்திக்கை ரன் எதுவும் எடுக்கவிடாமல் வீழ்த்தினார் ரபாடா.

அப்போதும்கூட 12 பந்துகளில் 10 ரன்கள் தான் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய நோர்கியா 3 ரன்கள் மட்டும் கொடுத்து மார்கனை ரன் எதுவும் எடுக்கவிடாமல் போல்ட் செய்தார்.

இதனால் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை அஸ்வின் வீசினார். ஷகிப் அல் ஹசன், நரைன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள்.

இதனால் 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார் திரிபாதி. அஸ்வினின் கடைசி ஓவர் பற்றி முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:

அஸ்வின் புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர். எந்த பேட்டருக்கு எப்படிப் பந்துவீச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். பேட்ஸ்மேனின் மனநிலையைப் படிப்பார்.

சுநீல் நரைன் மேலேறி வந்து சிக்ஸ் அடிக்க முயல்வார் என அவருக்குத் தெரிந்ததால் சற்று தள்ளி பந்துவீசி ஆட்டமிழக்கச் செய்தார். கடைசிப் பந்தில் தவறாகக் கணித்துவிட்டார்.

திரிபாதியும் மேலேறி வந்து அடிப்பார் என நினைத்துவிட்டார். எனவே பந்தை ஃபிளாட் ஆக வீசினார். அதனால் திரிபாதியால் ஷாட் அடிக்கக் கடினமாக இருக்கும் என எண்ணினார். இதை திரிபாதியும் எதிர்பார்த்திருந்தார். அற்புதமான ஷாட் அடித்து ஆட்டத்தை முடித்தார் என்றார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்