“வேற வழியே இல்ல, நீங்க இதை செய்தே ஆகனும்” - ராகுல் டிராவிட்டிற்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை

advice rahul dravid world cup match ravi shastri
By Swetha Subash Jan 28, 2022 12:10 PM GMT
Report

இந்திய அணியின் எதிர்காலத்தை காப்பாற்ற ராகுல் டிராவிட் ஒரு விஷயத்தை செய்தே ஆக வேண்டும் என ரவி சாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது சோகமான காலக்கட்டமாக இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடரில் தோற்றது, பின்னர் கோலியின் விலகல், தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் மோசமான தோல்வி என அடுத்தடுத்த எதிர்பாரா நிகழ்வுகள் அரங்கெறியது.

இந்திய அணியின் இந்த சொதப்பல்களால் ராகுல் டிராவிட்டின் பயிற்சி மீது ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரின் பயிற்சியில் இந்திய அணி தனது முதல் அயல்நாட்டு தொடரிலேயே தோல்வியை தழுவியுள்ளது.

அடுத்ததாக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பைகள் நெருங்கி வரும் சூழலில் இப்படி இருந்தால் இந்திய அணியின் எதிர்காலம் என்ன ஆகும் என வல்லுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிரச்சினையை சரிசெய்ய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அட்வைஸ் கூறியுள்ளார்.

அதில், இந்திய அணிக்கு அடுத்த 8 - 10 மாதங்கள் மிக மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும். இந்த சமயத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்வது அவசியமாகிறது.

அவர்கள் அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தூணாக இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் சீனியர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலந்த அணியே சிறப்பாக இருக்கும்.

அணியின் எதிர்காலத்திற்காக சில சமயங்களில் முக்கிய மாற்றங்களை செய்து தான் ஆக வேண்டும். அப்படிபட்ட காலம் தான் தற்போது. அடுத்த 6 மாதத்திற்கு இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

நீங்கள் இன்னும் பழைய அணியையே நம்பிக்கொண்டிருந்தால், பின்னர் அணியை சரி செய்வது கடினமாகி விடும் என ரவிசாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர்கள் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் சொதப்பிய போதும், டிராவிட் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார்.

ஆனால் சிறப்பான ஃபார்மில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி போன்றோர் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அமர்ந்திருந்தனர். இதனை குறிப்பிட்டு தான் ரவிசாஸ்திரி பேசுகிறார் எனக்கூறப்படுகிறது.