பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலகல்? - சிக்கலில் இந்திய அணி
இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவிசாஸ்திரி சென்ற நேரத்தில், இளம் வீரர்கள் அடங்கிய மற்றொரு இந்திய அணி இலங்கை தொடரில் பங்கேற்க சென்றது. இதற்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த விவாதம் தொடங்கியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரவிசாஸ்திரி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதைய இந்திய அணிக்கு தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.
அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்பட்ட நிலையில் அவரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை மீண்டும் நியமிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவருடன் சேர்த்து ல்டிங் கோச் ஸ்ரீதர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்றுள்ள நிலையில் தற்போது அதன் தலைமை பதவியில் இருக்கும் ராகுல் டிராவிட் தான் அடுத்த இந்திய அணியின் பயிற்சியாளராக வரவிருக்கிறார் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.