ஜடேஜாவை கேப்டனாக்கியது மிகப்பெரிய தவறு - ரவி சாஸ்திரி கருத்தால் சர்ச்சை
சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டது தவறானது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 21 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியன்களான சென்னை அணி விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
இந்த வரலாறு காணாத தொடர் தோல்விகளால் அந்த அணி ரசிகர்கள் நொந்து போயுள்ளனர். இதேபோல் மும்பை அணியும் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்ததே தவறான முடிவு என கூறியுள்ளார். சென்னை அணி ஐபிஎல் ஏலத்தில் டூபிளெசிஸை விடுவித்திருக்க கூடாது. அவரை தக்கவைத்து கேப்டனாக நியமனம் செய்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கேப்டன் பொறுப்பால் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டமும் கடுமையாக பாதித்துள்ளது. அந்த அழுத்தம் இல்லாவிட்டால் ஜடேஜா கூடுதல் சுதந்திரத்துடன் வழக்கம் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார் எனவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.