“நான் பேசின சில விஷயங்களால வருத்தப்பட்டீங்கன்னா, அது எனக்கு சந்தோஷம் தான்” - அஷ்வின் குறித்து ரவி சாஸ்திரி திட்டவட்டம்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஒரு ஆங்கில இணைதளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அஷ்வினின் கிரிக்கெட் வாழ்க்கை, அவர் காயங்களை எதிர்கொண்ட விதம், வீழ்ச்சியிலிருந்து அவரின் மீள் வருகை என பல விஷயங்கள் குறித்தும் அஷ்வின் அந்த பேட்டியில் விரிவாக பேசியிருந்தார்.
அஷ்வின் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சமயங்களில் அவர் எப்படி உணர்ந்தார்? என்பது போன்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு 'நான் ரவிசாஸ்திரி மீது மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன். ஆனால், நான் அணியில் தேர்ந்தெடுக்கப்படாத சமயத்தில், இனி குல்தீப்தான் அணியின் நம்பர் 1 ஸ்பின்னர் என ரவிசாஸ்திரி பேசிய சமயத்தில் முழுமையாக உடைந்து போய்விட்டேன்.
குல்தீப்பிற்காக குல்தீபின் பெர்ஃபார்மென்ஸிற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் நான் கூட 5 விக்கெட் ஹால் எடுக்கவில்லை. குல்தீப் எடுத்திருக்கிறார். அவருக்காக முழுமையாக மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால், அந்த கொண்டாட்டத்தில் நான் அணியுடன் பங்கெடுக்க வேண்டுமெனில் நான் அவர்களில் ஒருவனாக உணர வேண்டும். நான் அப்படி உணரவில்லையே. நான் தூக்கியெறியப்பட்டவனாக இருந்தேன்' என பேசியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரவி சாஸ்திரி,
“ஒரு பயிற்சியாளராக என்னுடைய வேலை என்ன என்பதை விளக்க கடமைப்பட்டுள்ளேன். காயம் காரணமாக சிட்னி டெஸ்டில் அஷ்வின் பங்கேற்கவில்லை.
அவருக்கு பதிலாக அந்த போட்டியில் பங்கேற்றிருந்த குல்தீப் ஐந்து விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார். எனவே, அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு தருவதே நியாயம், அதுவே சரி என நினைக்கின்றேன்.
ஒரு இளம் வீரரை ஊக்குவிப்பதே பயிற்சியாளரின் கடமை. ஒரு வீரரை மனதளவில் நான் காயப்படுத்திவிட்டதாக இருந்தால், அது நன்மைக்கே என எடுத்து கொள்ளலாம்.
நான் பேசின சில விஷயங்களால் அவர் வருத்தப்பட்டார், அதனால் அவரது திட்டம் மாறியது என்றால் அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
2019 ஆண்டும், 2021 ஆண்டும் அஷ்வின் பந்துவீசியதற்கு நிறைய வித்தியாசம் உண்டு.
’எனது கடினமான காலக்கட்டத்தை சரி செய்து முன்னேற்றம் கண்டு, என்னுடைய பயிற்சியாளருக்கு நான் யார் என்பதை நிரூபிப்பேன்’ என ஒரு வீரர் சொல்ல வேண்டும், செயல்பட வேண்டும் என விரும்பும் பயிற்சியாளர் நான்.” என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.