"இந்திய அணி தோற்க வேண்டும் என சில பேர் நெனச்சாங்க” - ரவி சாஸ்திரி வேதனை
என்னை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கொண்டு வரக்கூடாது என்று சிலர் முயற்சி செய்தனர் என்று ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரவி சாஸ்திரி 2014 - 2016 வரை இந்திய அணியின் இயக்குனராக இருந்தவர்.
கும்ப்ளேவிற்கும், விராட் கோலிக்கும் இடையேயான பிரச்சனையில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக பதிவியேற்ற ஒன்பதே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் ஜூலை மாதம் 2017-ல் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இவரின் பயிற்சி காலத்தில் ஆஸ்திரேலிய அணியை 2 தடவை அதன் சொந்த நாட்டிலேயே இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் வரிசையிலும் நம்பர் 1 இடத்தை கைப்பற்றியது, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் அணி வெற்றி கண்டது.
இவ்வளவு வெற்றிகளை தந்த போதிலும் ICC உலகக்கோப்பையை கைப்பற்றாதது ஒரு குறையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் 59 வயதாகும் ரவி சாஸ்திரி 4 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் அவரது பதவி காலம் நிறைவு பெற்றதால் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியுடன் தான் வகித்து வந்த தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் அனுபவித்த சிலவற்றை நினைவுகூர்ந்துள்ளார் .
அதில் அவர் கூறுகையில், "நான் இந்த பதவிக்கு வந்துவிட கூடாதென்று நிறைய பேர் முயற்சி செய்ததோடு, என்னால் பயிற்றுவிக்கப்படும் இந்திய அணியும் தோற்க வேண்டும் எனவும் சிலர் எண்ணினர்.
நான் இந்த பதவிக்கு வந்தது பலருக்கும் அதிருப்தியை அளித்திருக்கும். கும்ப்ளே 9 மாதங்களிலேயே பதிவியிலிருந்து விலகியதால் அவர்களுக்கு வேறு வழி தெரியாமல் என்னை இப்பதவியில் நியமித்தனர்.
அதோடு பந்து வீச்சின் பயிற்சியால் பரத் அருணையும் அப்பதவிக்கு கொண்டு வர சிலர் விரும்பவில்லை. நான் கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் அனைவரையும் குறை கூறவில்லை, குறிப்பிட்ட சிலரை பற்றி தான் கூறுகிறேன்.
ஐசிசி உலகக்கோப்பையை நாங்கள் தவறவிட்டது வேதனையான ஒன்று. 2019 உலகக்கோப்பைக்கான போட்டியில் விக்கெட் கீப்பர்களாக தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பாண்ட் ஆகிய மூவரையும் நியமித்ததில் எனக்கு சம்மதம் இல்லை.
அணியில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நான் இதுவரை தலையிட்டதில்லை. அம்பத்தி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் யாராவது ஒருவரை தேர்வு செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.
மேலும் இளம் வீரர்களான பும்ரா, ரிஷப் பாண்ட், சுப்மான் ஆகியோர் மூத்த வீரர்களை விடவே குறுகிய காலத்தில் நன்கு திறமையுடனும், துணிச்சலுடனும் நன்கு விளையாடுகின்றனர். என்னை பொறுத்தவரை ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சிறந்த வீரர்கள், இவர்கள் நன்கு யோசித்து துணிச்சலுடன் விளையாடுகின்றனர்" என அவர் கூறினார்.