“இப்பதான் எங்களுக்கு நிம்மதியா இருக்குது” - டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்து பிரபல வீரர் கருத்து
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் ஏபிடிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரருமான டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவரது இந்த முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டாலும் ஐபிஎல் போன்ற தொடர்களில் டி வில்லியர்ஸ் தொடர்ந்து விளையாடி வந்தார். அவருடனான நினைவுகள் குறித்து பல்வேறு வீரர்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டனர்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான ரஷித் கான் கூறுகையில், ஏபிடிவில்லியர்ஸின் ஓய்வு என்னைப் போன்ற பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயமாக மிகப்பெரிய நிம்மதிதான். என்னைப் போன்ற பல இளைஞர்களின் ஊக்க சக்தியாக விளங்கியதற்காகவும் பல நல்ல நினைவுகளை வழங்கியதற்காவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிஸ்டர் 360- நிச்சயமாக நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம்” என தெரிவித்துள்ளார்.